Wednesday, July 17, 2019

நுழைவுத் தேர்வுகளின்றி ஐஐடி-யில் சேர முடியுமா?

நுழைவுத் தேர்வுகளின்றி ஐஐடி-யில் சேர முடியுமா? 

அநேக பொறியில் கல்லூரிகள் வந்துவிட்டபோதும் அவை எல்லாம் ஐஐடி அளவுக்கு வரவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. ஐஐடியில் பயிலும் மாணவர்கள் படிக்கும்போதே நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களிடம் உரையாடுவதற்கான வாய்ப்பு, மாணவர் பரிமாற்ற திட்டத்தின்படி படித்துக்கொண்டிருக்கும்போதே எம்ஐடி, ஸ்டேன்ஃபோர்டு, ஹார்வர்டு போன்ற உலகளவில் பெயர்பெற்ற சிறந்த பல்கலைக் கழகங்களுக்கு செல்லும் வாய்ப்பு என பல காரணங்கள் இதற்கு உண்டு.மேலும் ஆராய்ச்சிகளுக்காக வேறெந்த கல்வி நிறுவனங்களை காட்டிலும் இங்கு அதிகமாக ஊக்கத் தொகை, சாதகமான சூழல் என அனைத்தும் சிறந்த முறையில் கிடைக்கப்பெறுகிறது. 


இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால் எவ்வளவு திறமையான மாணவர்களாக இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலான சீட்டுகளே ஐ.ஐ.டியில் இருப்பதால் பலருக்கும் இந்த பொன்னான வாய்ப்பு கிட்டுவதில்லை. இந்நிலையில் நுழைவுத்தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறுபவர்கள், 

தேர்வை எழுதமுடியாமல் தவற விட்டவர்களுக்காக குஜராத்தில் உள்ள ஐஐடி காந்திநகர் பல்கலைக்கழகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் இளநிலை படித்து கொண்டிருப்பவர்கள் முதுநிலை படித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு செமஸ்டர் மட்டும் முழுநேரமாக ஐஐடி-யில் பயில முடியும். பட்டம் இல்லா படிப்பு என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரிவில் முழு நேர வகுப்புகள் மற்றும் பகுதி நேர வகுப்புகள் ஒரு செமஸ்டர் முழுவதிலும் ஐஐடி-யில் நடைபெறும். அப்போது மாணவர்கள் நேரடியாக ஆசிரியர்களுடன் வகுப்பறைகளில் அமர்ந்து பயிலலாம். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே வாய்ப்பு கிடைக்காத திறமைமிகுந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதே என்று கூறுகிறார் காந்திநகர் ஐ.ஐ.டி-யின் இயக்குநர் சுதீர் கே.ஜெயின். ஒரு செமஸ்டர் நடக்கும் அந்த வகுப்புகளின் முடிவில் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி துணை வேந்தர் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படும். இதை மாணவர்கள் தங்களது ரெஷ்யூம்களில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 இன்று உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களும் ஆன்லைனில் இதுபோன்ற சான்றிதழ் வகுப்புகளை நடத்திவருகிறது, இதைப்போன்ற இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும் இங்கு மாணவர்கள் ஆசிரியருடன் சேர்ந்து உரையாடமுடியும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் நடத்தப்படும் இரண்டு செமஸ்டர்களில் மாணவர்கள் எந்த செமஸ்டருக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 


ஆகஸ்டு முதல் நவம்பர் வரை நடைபெறும் முதல் செமஸ்டரில் பயில ஜூலை 1க்குள் விண்ணபித்திருக்வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடைபெறும் செமஸ்டருக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை விண்ணப்பிக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எதாவது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படித்துக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments