Wednesday, October 9, 2019

மிரட்டும் `மெட்ராஸ் ஐ'... தவிர்க்க, தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மிரட்டும் `மெட்ராஸ் ஐ'... தவிர்க்க, தடுக்க என்ன செய்ய வேண்டும்? 

பொதுவாக காலநிலை மாறும்போது சில நோய்களின் தாக்கம் ஏற்படும். அந்த வகையில் தற்போது 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


குறிப்பாக, `குழந்தைகள் இந்தத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்' என்றும் கூறுகின்றனர். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது, தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று கண் மருத்துவர் சௌந்தரியிடம் கேட்டோம்.கண் நோய்த் தொற்றானது எளிதில் பரவக்கூடியது. குழந்தைகளை எளிதில் தாக்கும். பள்ளியில், விளையாட்டு மைதானங்களில், டியூஷன் மையங்களில் மற்றும் அடிக்கடி சென்று வரும் பிற இடங்களிலிருந்து இந்தத் தொற்று பரவலாம். 


இதில் மூன்று வகை உண்டு. ஒன்று பருவ காலத்தில் ஏற்படுகிற ஒவ்வாமை. இது தூசி, புகை உள்ளிட்டவற்றால் ஏற்படும். இரண்டாவது நுண்ணுயிரி அல்லது நச்சுயிரி தொற்றுகளால் ஏற்படுவது. மூன்றாவது ஷாம்பு, அழுக்கு, நீச்சல் குளத்திலுள்ள குளோரின் போன்ற எரிச்சலூட்டிகளின் காரணமாகவும் ஏற்படும். விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே 'மெட்ராஸ் ஐ'என்று அழைக்கப்படுகிறது. 



இந்தப் பாதிப்புள்ளவர்களுக்குக் கண்ணில் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் நீர் சுரந்துகொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.கண் சிவந்துபோயிருந்தால் அது `மெட்ராஸ் ஐ'ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. கருவிழியில் பிரச்னை, கண் அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். ஆகவே, கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 


அப்போதுதான் அது எந்த வகையான பிரச்னை என்பதை அறிய முடியும். சிலர் `மெட்ராஸ் ஐ'தானே என்று அலட்சியப்படுத்தி, சுய மருத்துவம் செய்துகொள்கிறார்கள். மருந்தகங்களுக்குச் சென்று மருந்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பிறகு, பிரச்னை தீவிரமானதும் கண் மருத்துவர்களை நாடும் போக்கு இருக்கிறது. இவர்கள் செய்யும் தாமதத்தால் அந்த நோய் அவர்களிடமிருந்து பிறருக்குப் பரவும் வாய்ப்புகள் அதிகம்.அதே போல் ஒரு கண்ணில் தொற்று ஏற்பட்டால் அடுத்த கண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமாகச் செயல்படுவது நல்லது. இது எளிதில் குணப்படுத்தக்கூடிய சாதாரணமான நோய்த் தொற்று என்பதால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால் முற்றிலும் குணமாகிவிடும். இந்தத் தொற்று ஏற்பட்டால் சில நேரங்களில் கண்ணீரோடு சேர்ந்து சிறிய அளவில் ரத்தக்கசிவு ஏற்படலாம். 


குறிப்பாக, குழந்தைகளுக்கு அந்த மாதிரி ஏற்படும்போது பெற்றோர் பதறிப் போவார்கள். இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. கண்ணில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, கருவிழிக்கு வெளியே சுற்றி வெள்ளையாக இருக்கும் பகுதியில் ஜவ்வு (Membrane) உருவாகும். இதனால்தான் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதற்கு கண் மருத்துவரின் பரிந்துரை பெற்று, மருந்து போட்டால் சரியாகிவிடும். உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் முழுமையாக குணமடைய ஒரு வாரத்திலிருந்து பத்து நாள்கள் ஆகும்" என்றார். 

 Hand wash 

மெட்ராஸ் ஐ... சில ஆலோசனைகள்! 

 * `மெட்ராஸ் ஐ'யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய சுகாதாரம் மிகவும் அவசியம். 

 * கண்ணில் மருந்து போட்டுக்கொண்டாலோ, கண்ணில் கை வைத்தாலோ உடனடியாக கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். 

 * கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது நொய்த்தொற்று எளிதாகப் பரவும் என்பதால் பிறருக்குத் தங்களுடைய துண்டு, கைக்குட்டை போன்றவற்றைப் பகிரக்கூடாது. 


 * `மெட்ராஸ் ஐ' பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களின் கண்களைப் பார்ப்பதால் நோய் பரவும் என்பது தவறான கருத்து.
Disqus Comments